நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சிறகு கொடுப்பாரோ!


திருமணபந்தம் தொட்டுத்தொடர
இருமனங்கள் இணையும் முன்னே
இருட்டியது வாழ்க்கை இருமாதத்தில்
இளம் வயதில் இதயத்தில் இடி
இறப்பு வந்தது விபத்தால் உயிர்பலி

விளங்காதவள் இவளென்று
வசைபாடும் சுடுசொற்களால்
வாட்டம்கொண்டு நெஞ்சம் ஆட்டம் காண
விதவைக்கோலம் வீட்டுசிறையால்
விரக்தி கண்ட உள்ளம்

வீதி இறங்கினாலும்
வெடுவெடுக்கும் முகங்களால்
வெதும்பித் ததும்ப- மனதுக்குள்
வேதனைகளும் வேடிக்கைக் காட்டிட

இரு விழிகள் எறிய
இமைகள் சுமையால் சரிய
இதயத்தின் நரம்பெல்லாம்
இறுகியே ரணமாக

நிலவை மேகம் மூடும்போதெல்லாம்
நினைவுகள் மெல்ல திறக்க
நெஞ்சத்தின் அறையெங்கும்
நெருப்பு அனல்கள் பறக்க

பட்டாம்பூச்சியின் ரெக்கைதன்னை
பட்டென பிடுங்கிய மாயமென்ன
பட்டுபோன தன் மகளின் வாழ்வைபார்த்து
பெற்றமனங்கள் படும் துயரங்களென்னென்ன!

பாவை மெல்ல உருகுவதும்
பசலை நோயால் வாடுவதும்
பாவம் யாரும் அறிவாரோ
பசுங்கிளிக்கு வாழ்வுச்சிறகு கொடுப்பாரோ!

வழி தேடும் பயணங்கள்
வலி சொல்லும் சலனங்கள்
விழி மெல்லும் விரசங்கள்
வாழ வகைதேடும் எண்ணங்கள்

மனதுக்குள்ளே பல புழுக்கங்கள்
மறைத்து வாழும் சந்தர்ப்பங்கள்
எழுதுகோல் வழியே கவலைகள்
எழுதிட தீருமோ! இதுபோன்ற ஏக்கங்கள்!


டிஸ்கி// திருமணமான கொஞ்ச[நாட்கள்]காலத்திலேயே கணவரை பிரிந்துவா]டு[ழும் எத்தனையோ பாவைகள் அதில் ஒரு சிலரை நானும் கண்டதுண்டு அவர்களின் ஏக்கங்கள் கனவுகள் துயரங்கள். அவையெல்லாம் சொல்லில் வடிக்கத்தெரியவில்லை. ஆனாலும் அவர்களுக்குள் இருக்கும் வேதனைகளை தோளிறக்கிவைக்க ஒரு தோள் தேவை அது நட்பைவிட அன்பாக ஆனால் அது அவர்களுக்கு சிறந்ததாக இருக்கும் என எண்ணிக்கொண்டே எழுதுகிறேன்! 
எனது சிறு வேண்டுகோள் இதுபோன்றவர்களை மணம்முடிக்க விரும்பும் உள்ளங்கள் எவரேனும் உண்டா! இருந்தால் இதில் தெரியப்படுத்துங்கள். இது ஒரு மாற்றுமத சகோதரி ஒருத்திகாண தேடல்!


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது